
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரது தலைமையில் நடைபெறும் முதலாவது சுதந்திர தின நிகழ்வு இதுவாகும். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதி சுதந்திர சதுக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி தொடர்ந்த உரையாற்றுகையில்,
கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.
நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த நான்கு மாதங்களில், வலுவான பொருளாதார அடிப்படையில் நாட்டை ஸ்திரப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துதல், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பிலான புதிய முன்னுதாரணத்துக்காக அர்ப்பணித்தல், இனவாதம் இமதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம், கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல், ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
ஊழல் ஆட்சியாளர்கள் நிறைந்த நாடு என்று முன்பு காணப்பட்ட பிம்பத்தை தவித்து, உலகின் அனைத்து நாடுகளுடனும், மிகவும் நம்பகத்தன்மையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நாடென சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை மீள அடையாளப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.
எமது வாக்குறுதியின்படி இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.
அதற்காக, அனைத்து இலங்கை மக்களையும் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறும், 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வுக்கு அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், பல்வேறுதுறை சார்ந்த முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டிருந்ததுடன் இம்முறை பெருமளவிலான பொதுமக்களும் சுதந்திர தின விழாவை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.