பிணைய கைதிகளை விடுவிக்காவிட்டால் தொலைத்துக்கட்டி விடுவேன்”…
வருங்கால அதிபரின் அதிரடி எச்சரிக்கை – ஹமாசுக்கு கெடு…
பணய கைதிகளை வரும் 20ம் தேதிக்குள் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், 250க்கும் மேற்பட்டோரை காசா முனைக்கு பணயக் கைதிகளாக கடத்திச் சென்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும், தான் அதிபராக பொறுப்பேற்கும் முன் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஹமாசுக்கு கெடு விடுத்துள்ளார்.
2023ம் ஆண்டு அக்டோபர் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 251 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது. ஆனாலும் மீதமுள்ள பணய கைதிகள் ஹமாசிடம் சிக்கி தவித்து வருகின்றனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது.
இந்த போரில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தவும், பணய கைதிகளை மீட்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாயன்று புளோரிடாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப், 20 ஆம் தேதி தான் பதவியேற்கும் முன் பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யவேண்டும். பேச்சுவார்த்தை தொடர்பாக நான் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் மத்திய கிழக்கில் உள்ள நகரம் வெடிப்பது நிச்சயம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.