முழு உலக நாடுகளும் தன் விழிகளை அமெரிக்காவின் பக்கம் திசை திருப்பியிருக்கிற இந்தத்தருவாயிலே அமெரிக்காவின் 60வது அதிபர் தேர்தல் நாளை இடம்பெறவிருக்கிறது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான தேர்தல் மோதல;கள் உக்கிரம் அடைந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஏற்கனவே 77.6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் தேர்தல் போர்க்கள மாநிலங்களில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட –கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய தேர்தலைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஏழு ஸ்விங் மாநிலங்களில் போட்டி மிகவும் நெருக்கமாக இந்த முறை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி ஆகியன இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. பென்சில்வேனியா மாநிலத்தில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் திறம்பட சமமாக உள்ளதாகவும் ஒவ்வொருவரும் 48 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 538 இன் தேசிய வாக்கெடுப்பு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி கமலா ஹாரிஸ் டிரம்பை விட 1 சதவீத புள்ளியில் குறுகிய முன்னிலை பெற்றுள்ளார். எவ்வாறாயினும் இந்த முன்னிலை சுருங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. ஸ்விங் மாநிலங்களில் போட்டி தீவிரமடைந்து வருகிறத இச்சந்தர்ப்பத்திலே டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் ஸ்விங் ஸ்டேட்களில் அதிக கவனம் செலுத்துவதை காணமுடிகிறது.
நாடு முழுவதும், முதல் வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு (1800 EST), அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடையும். கடைசி வாக்கெடுப்புகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு (0100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு முடிவடையும்.
ஆனால் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய ஏழு மாகாணங்களின் முடிவுகளால்தான் இந்த அதிபர் தேர்தல் போட்டி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகைக்கான இத்தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக தெரிவு செய்யப்படுபவர் எதிர்வரும் 2025 ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றுவார்.
வாக்காளர்கள் ஜனாதிபதியை மட்டுமல்ல பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட் இடங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.