ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச உயர் நிறுவனங்களில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை ஏற்கப் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறித் தட்டிக் கழிக்கும் அரசியல் அணுகுமுறை வெளிப்படையாகவுள்ளது.
இந்த நிலையில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் எழுபது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற போரில் தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளானமை தொடர்பான விபரங்களை விக்கிப்பீடியா (Wikipedia) இணையத்தளம் மதிப்பீடு ஒன்றின் அடிப்படையில் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது.
விக்கிப்பீடியா இணையத்தளத்தின் குறித்த அறிக்கையின்படி, 1956ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரைக்கும் 253 818 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் இதில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் 169 796 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையிட்டுள்ளது.
பலாத்காரம் – சித்திரவதை
இதனிடையே இந்த காலப்பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 12 437 எனவும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள் 112 246 எனவும் இடம்பெயர்ந்தவர்கள் 2 390 809 எனவும் முதல் முறையாக விக்கிபீடியா அறிக்கையிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை இன்றளவிலும் ஏற்க மறுக்கும் தரப்புகள் சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்றன.
விக்கிப்பீடியா (Wikipedia) மூலம் இவ்வாறு வெளியிடப்பட்ட தமிழ் இன அழிப்பு விபரங்களும் இதனால் ஈழத் தமிழர்களின் அரசியலில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் காணப்படுகின்றன.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில தமிழ் தலைமைகள் ஏற்க மறுக்கின்றன.
எது வகிபாகம்
அயல் நாடான இந்தியாவும் ஏற்க மறுக்கும் அதேவேளை விக்கிப்பீடியாவின் அறிக்கையிடல், ஈழத்தமிழர்கள் தொடர்பான உண்மையான வகிபாகத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
கனடா நாடாளுமன்றத்தில் இனஅழிப்புத் தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறுபேர் இந்த மாதம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
இப் பின்னணியில் சர்வதேச மட்டத்தில் இயங்கும் விக்கிபீடியா என்ற ஆவணச் சேகரிப்புக் களஞ்சியம் ஈழத் தமிழர் தொடர்பான விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
இலங்கை அரசாங்கம் மறுக்கும்
இலங்கை அரசாங்கம் இதனை மறுப்பதற்கான வாய்ப்பும் முறைப்பாடு செய்து இந்த விபரங்களை நீக்குவதற்கான சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.
ஆதாரங்கள் இருந்தால் விக்கிபீடியாவில் எவருக்கும் பதிவு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் இந்தப் பதிவு தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய முறைப்படி முறைப்பாடு செய்யும் என எதிர்ப்பார்க்கலாம்.
அதேவேளை இங்கு வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானதா இல்லையா என்பது தொடர்பாக தமிழ்த்தரப்பில் இருந்து இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
https://en.m.wikipedia.org/wiki/Tamil_genocide