கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான றீமால் சூறாவளியினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா மற்றும் பங்களதேஷின் தென் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
றீமால் சூறாவளியானது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதை அடுத்து, கடும் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூறாவளி கரையை கடக்கும் சந்தர்ப்பத்தில், சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறாவளி பயணித்த பாதையில் 3.6 மில்லியன் குழந்தைகள் அடங்களாக 8.4 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
பங்களதேஷில் இந்த சூறாவளியினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டே பங்களதேஷ் மக்கள் உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மொஹிப்பூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்காள அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.