லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை பெயர் வெளியிடப்படாத இறந்தவரின் குடும்பத்திற்கு அந்நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
விமானத்தில் இருந்த 31 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பயணிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாகவும், கூடுதல் உதவி அளிக்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகாலக் குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்றார்.
“லண்டநில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்,” என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.