ஜேர்மன் கால்பந்துக் குழுவின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர தற்காப்பு ஆட்டக்காரருமான ஃபிரான்ஸ் பெக்கன்பவர் Franz Beckenbauer தனது 78 வயதில் காலமானார்.
பெக்கன்பவரைக் கால்பந்து உலகம் செல்லமாக ‘கைசர்’ (பேரரசர்) என்று அழைத்தது. ஆட்டக்காரர், குழு நிர்வாகி என்கிற முறையில் உலகக் கிண்ணத்தை வென்ற மூவரில் இவரும் ஒருவர்.
பிரேசிலின் மாரியோ ஸகாலோவும் பிரான்சின் டிடியர் டெஷோம்ப்பும் ஏனைய இருவராவர். இதில் மாரியோ ஸகாலோ இயற்கை எய்தி மூன்று நாள்களில் பெக்கன்பவர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1974ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் அப்போதைய மேற்கு ஜேர்மனியின் அணித் தலைவராக பெக்கன்பவர் களமிறங்கினார். அவரது தலைமையின்கீழ் இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய நெதர்லாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி தோற்கடித்து கிண்ணத்தை வெற்றிகொண்டது.
1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மேற்கு ஜேர்மனியின் நிர்வாகியாக பெக்கன்பவர் செயல்பட்டார். அவரது மிகச் சிறந்த வழிகாட்டுதல், தலைமைத்துவம் மேற்கு ஜேர்மனிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் டியேகோ மரடோனாவின் தலைமையின்கீழ் களமிறங்கிய அர்ஜென்டினாவுடன் மேற்கு ஜேர்மனி மோதியது. பெக்கன்பவரின் அனுபவம், அவர் வகுத்த வியூகம் மேற்கு ஜேர்மனியை 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தது.
1960களிலிலும் 1970களிலும் மேற்கு ஜேர்மனிக்காகவும் பயர்ன் மியூனிக் குழுவுக்காகவும் ஆட்டக்காரர் என்கிற முறையில் பெக்கன்பவரின் பங்களிப்பு அளப்பரியது. மேற்கு ஜேர்மனிக்காக அவர் 103 முறை களமிறங்கியவர்.
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மட்டும் அல்ல, மற்ற போட்டிகளிலும் அவர் வெற்றிக் கனியைச் சுவைத்தவர். 1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியக் கால்பந்துப் போட்டியில் வாகை சூடிய மேற்கு ஜேர்மனிக் குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.
அவர் அணியின் முகாமையாளராக இருந்தக் காலக்கட்டத்தில் ஜேர்மன் அணி 1990 ஆம் ஆண்டும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 1972 மற்றும் 1976 ஆம் ஆண்டுக்கான ‘பலோன் டி ஓர்’ விருதினை இவர் வென்றுள்ளதுடன், 2000ஆம் ஆண்டில் ஜேர்மனியின் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், அவர் 2004 இல் பிபா நூற்றாண்டு வீரர் மற்றும் கால்பந்து ஆளுமை விருதையும் பெற்றிருந்தார்.
பெக்கன்பவரின் மரணம் குறித்த செய்தி வெளியானதை அடுத்து, கால்பந்து உலகம் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளது. பெக்கன்பவருக்கான இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. பெக்கன்பவரின் மரணம் மிகுந்த வேதனையை அளிப்பதாக ஜேர்மன் காற்பந்து லீக்கின் நிர்வாகமும் அதில் போட்டியிடும் குழுக்களும் தெரிவித்துள்ளன.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவும் அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது. ஜேர்மனியின் பரமவைரியான இங்கிலாந்துக்காக முன்பு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான கோல்காப்பாளர் பீட்டர் ஷில்டனும் தாக்குதல் ஆட்டக்காரர் கேரி லினிக்கரும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.