தென்னிந்திய பிரபல நடிகரான இளையத் தளபதி விஜய், தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘லியோ’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்தப் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. படத்தின் இந்த ஷெட்யூலுக்காக இயக்குனர் வெங்கட் பிரபு முக்கிய நடிகர்களை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படக் குழு தங்கள் குடும்பங்களுடன் புத்தாண்டுக்காக ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் அடுத்த ஷெட்யூல் இலங்கையில் இடம்பெறும் எனவும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
‘தளபதி 68’ ஒரு டைம் ட்ராவல் படம் என்று கூறப்படுகிறது, இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பல நட்சத்திரங்கள் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதுடன் கல்பாத்தி எஸ்.அகோரம் படத்தை தயாரிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.