காஸாவில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை கடும்மழையால் மோசமடைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடம்பெற்று வரும் நிலையில் காஸாவில் மக்கள் தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர். தற்போது தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலை கடும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை காரணமாக சில இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜபாலியா அகதிகள் முகாம் முழுதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ராஃபா அகதிகள் முகாம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த முகாம்களில் தொற்றுநோய் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.காஸாவில் இதுவரை சுமார் 2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதுடன், இது அங்குள்ள மக்கள் தொகையில் 90 வீதமாகும்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் தமது படையினருக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் போரில் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 மணிநேரத்தில் இரண்டு படைத் தளபதிகள் உள்ளிட்ட தனது பத்து இராணுவ வீரர்கள் போரில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதற்காக ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்த மறுநாளிலிருந்து தாக்குதல் தீவிரமாகி உள்ளது. மேலும், பொதுமக்கள் மீது இஸ்ரேல் ‘கண்மூடித்தனமாக’ குண்டுகளை வீசுவதால் அனைத்துலக எதிர்ப்புக்கு அது ஆளாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
“போர் நிறுத்தத்திற்கு அனைத்துலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் தமது இராணுவம் தொடர்ந்து போரில் ஈடுபடும். இறுதிவரை, வெற்றி கிட்டும்வரை, ஹமாஸ் ஒழிக்கப்படும்வரை தொடர்ந்து போரிடுவோம். மிகுந்த வேதனையை நாம் எதிர்கொள்ளும் நிலையிலும் அனைத்துலக அழுத்தத்திற்கு இடையிலும் நான் இதனைச் சொல்கிறேன். நம்மை எதுவும் தடுத்து நிறுத்தாது” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.