சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதம் இன்றி மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான இன்றைய தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை உடனடுத்து ஒழுக்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இன்று பி.ப 4.35 மணிக்கு சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய இரண்டமாவது மதிப்பீடு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
பி.ப 4.58 மணியளவில் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான விவாதம் நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், நிதிச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடும் மற்றும் மூன்றாவது மதிப்பீடு என்பன இடம்பெற்று, திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதுடன், குறைநிரப்புத் தெகை செலவீனத் தலைப்பும் அங்கீகரிக்கப்பட்டது.