காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அகதிகள் வசிக்கும் காஸா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், 15 நிரந்தர உறுப்பினர்கள் உடைய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தாக்கல் செய்த இந்த தீர்மானத்துக்கு, 90 நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
காஸா பகுதியில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானத்துக்கு, 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஐரோப்பிய நாடான பிரிட்டன், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில், ‘வீட்டோ’ எனப்படும் ஓட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தீர்மானம் தோல்வியடைந்தது.
இது குறித்து, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் ராபர்ட் வூட் கூறியுள்ளதாவது,
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பாக துவக்கத்தில் இருந்து எங்களுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
மனிதநேய அடிப்படையில் உதவிகள் கிடைப்பதை வலியுறுத்தி வருகிறோம். போர் நிறுத்தம் ஏற்படவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த தீர்மானம் அவசர அவசரமாக, குறுகிய நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது, ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் இதில் இடம்பெறவில்லை. இதனால், இந்த தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் எனக் கூறினார்.