இலங்கையில் முஸ்லீம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தொன்றை கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அவர் இவ்வாறாக கருத்து வெளியிட்டமை சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதுடன், மனு மீதான விசாரணைகளையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் குறித்த மனு (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு, இந்த மனு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.