மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் 11 மலையேறிகள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமத்ரா தீவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி மலை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதற ஆரம்பித்தது. குறித்த எரிமலையிலிருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வழிந்தோடியது.
குறித்த பகுதியில் இந்த வாரக்காலப்பகுதியில் மாத்திரம் 76 பேர் மலையேறியுள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் உயிரோடும் 11 பேர் சடலமாகவும் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாடாங் தேடி மீட்புக் முகவையின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவிக்கையில்,
“ஒரு பள்ளத்தில் இருந்தே உயிருடன் இருந்த மூன்று பேரையும் மீட்டோம்.அவர்களது நிலைமை மிக மோசமாக இருந்ததுடன், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையிலேயே மீட்கப்பட்டனர்.
எரிமலை தொடர்ந்து சீறிக் கொண்டிருப்பதால் ஹெலிகாப்டர்களின் உதவிகளையும் பயன்படுத்த முடியவில்லை. எனினும் மீட்பு பணிகள் துரித கதியிலேயே இடம்பெறுகிறது” என தெரிவித்தார்.