இலங்கையில் திருமணம் செய்த தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, அந்த விவாகரத்து இலங்கையின் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினரின் விவாகரத்தை அங்கீகரிக்க திருமணப் பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு ஒருவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும் இலங்கையில் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து பெறவேண்டும் என்ற தற்போதைய சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் 2010 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்தின் பின்னர் இருவரும் நிரந்தர வதிவிடத்திற்காக பிரித்தானியா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மனுதாரர் விவாகரத்து பெற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி ஊடாக மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மனுதாரரை திருமணம் செய்துகொண்டவரினால் பிரித்தானியாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை மீளப்பெறுவதற்கு மனுதாரர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவாகரத்து பிரித்தானிய குடும்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதுடன், விவாகரத்துச் சான்றிதழ் 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது.
பின்னர் மனுதாரர் 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த பின்னணியில், 2021 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை ஏற்குமாறு இலங்கை பதிவாளர் நாயகத்தை மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், பதிவாளர் நாயகம் விவாகரத்தை ஏற்க மறுத்துள்ளதுடன், மனுதாரர் இந்த நாட்டில் உள்ள பொருத்தமான நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பதிவாளர் நாயகத்தின் முடிவை இரத்து செய்யும் சான்றிதழைக் கோரி மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இடம்பெற்ற விவாகரத்து இலங்கையில் செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.