இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்கான விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் புதிய தலைவரை நியமிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பங்களை கையளித்துள்ளனர்.
கட்சியின் 6 இற்கும் மேற்பட்ட வழமையான உறுப்பினர்களின் ஒப்புதலுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கட்சியின் செயலாளர் பி.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை சமர்பித்துள்ளவர்களில் சுமந்திரன் கொழும்பைச் சேர்ந்தவர் என்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பியை விட சிறிதரன் எம்.பிக்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தமிழரசு கட்சியில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு ஆதரவு காணப்படுகின்ற போதிலும், கூட்டமைப்பு என்று வருகின்ற போது சிறிதரன் எம்.பிக்கு ஆதரவு வலுவாக காணப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆதரவு சிறிதரன் எம்.பிக்கே காணப்படுவதாகவும், பங்காளிக் கட்சிகளின் விருப்பதற்கு மாறாக தலைவரை தெரிவு செய்யும் போது கூட்டமைப்பு சிதையும் என்ற அச்சம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னரே தலைவர் தெரிவு குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.