ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் வடக்கு கிழக்கு நோக்கி படையெடுத்து வரும் நிலையில் தமிழர்களின் வாக்குகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கு இடையே காணப்படக்கூடிய ஒற்றுமையின்மை காரணமாக தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்து மேற்கொள்ளப்படும் முயற்சி வெற்றி பெறாது எனவும் ஜனாதிபதி அவரிடம் தெரிவித்துள்ளார்.
சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த உரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கின் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அநேக காரணங்களை ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவது தொடர்பிலான முன்மொழிவுகளையும் அவர் என்னிடம் கேட்டறிந்தாார் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன்,
‘அவ்வாறான ஒரு பொது வேட்பாளர் தொடர்பில் தீர்மானமொன்றை என்னால் மேற்கொள்ள முடியுமா என ஜனாதிபதி என்னிடம் கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அது தொடர்பில் என்னால் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியாது எனவும் அதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தேன்.
ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற வேண்டும் எனில், தமிழ் மக்களின் ஆதரவு அத்தியாவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு அவசியம் எனில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நான் தெரிவித்தேன்.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் பின்னர் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரமற்ற 13ஆம் சீர்த்திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டது.‘ என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ‘வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடையாளம் தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல நாட்டின் அனைத்து சிங்கள தலைவர்களினதும் வடிவம் ‘ என சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.