இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளராக கடமையாற்றிய கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (27) அதிகாலை கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு ஊழல் விசாரணை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவில் இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றில், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மீறி, குவைட் விமானத்தின் ஊடாக டுபாய் நோக்கி இன்று (27) அதிகாலை 12.50க்கு செல்ல முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 05ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.