ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகளை தடை செய்வதற்கான முன்மொழிவுக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஆதரவளித்துள்ளது.
இ-சிகரெட்டானது இளம் பருவத்தினர் சிகரெட் பாவனைக்கு பழக்கப்படுவதற்கான அடித்தளமாகவும் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
இதன்படி, குறித்த முன்மொழிவுக்கு தேசிய சட்டமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது.
இதற்கமைய, இ-சிகரெட்டுகளை தடை முன்மொழிவானது பாராளுமன்றத்தில் உள்ள 104 உறுப்பினர்களின் வாக்கையும் பெற்றுள்ளது.
இந்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்கு பிரான்ஸ் செனட்டின் ஆதரவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
puffs என அழைக்கப்படும் இ-சிகரெட் இளைஞர்களிடையே பிரபலமாக காணப்படுகிறது.
அதிகளவான நிகோடின் மற்றும் பல்வேறு சுவைகள், மலிவான விலையில் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இ-சிகரெட் பாவனையானது தீவிர போதைபொருள் பாவனைக்கு வழிவகுக்கும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இ-சிகரெட்டுகளை தடை அமுல்படுத்தப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட puffs எனப்படும் இ-சிகரெட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் ஜெர்மனி மற்றும் அயர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸில் ஆண்டுதோறும் சம்பவிக்கும் 75,000 உயிரிழப்புகளுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த பின்னணியில் நாட்டின் அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் காடுகள், பாடசாலைகளுக்கு அருகில் புகைபிடிப்பதை தடை செய்வதாக கடந்த மாதம் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன், பிரான்ஸில் சிகரெட்டுகள் மீதான வரி அதிகரிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.