அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்திருந்தது. கட்சிகள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு இலங்கையில் தேர்தல் இடம்பெறும் என பிரித்தானியாவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் குறித்த மிகவும் தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்காக ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதமே தேர்தல் நடத்தப்படும் என பலராலும் பரவலாக பேசப்படுகின்றது.
எனினும், ஆகஸ்ட் மாதத்தின் பின்னரே தேர்தலை நடத்த ஜனாதிபதி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனிடையே, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
தேர்தல் திகதியை முடிவுசெய்யும் போது அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றும் எனவும் அவர் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், அதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்றிருந்தார்.
எனினும், நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஆண்டு பதவி விலகியதை அடுத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் டளஸ் அழக்பெருமவை தோற்கடித்து ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.