இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர், இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பலஸ்தீனத்திற்காக இலங்கை ஆதரவாக செயற்படவேண்டும். இனப்படுகொலை நடக்காது என்று உலகில் கூறப்பட்டாலும் இன்று பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? அங்கே இனப்படுகொலை அப்பட்டமாக நடக்கிறது. பலஸ்தீனத்திற்கு எங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக இன்று நாங்கள் இந்த சால்வையை அணிந்துள்ளோம். பலஸ்தீனத்தில் போர் நிறுத்தப்படவேண்டுமென இந்த பாராளுமன்றத்தில் 157 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை ஐ.நா சபைக்கு நாங்கள் அனுப்பினோம். ஆனால் போரை நிரந்தரமாக நிறுத்துவதில் சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளது. இஸ்ரேல் அப்பட்டமாகவே மனித உரிமைகளை மீறுகிறது. முதியோர்களை, சிறுவர்கள் பெண்கள் மனிதநேய பணியாளர்கள் என்று ஏரளாமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இங்கே பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அங்கே இஸ்ரேலில் அந்த படையினர் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் கவனத்திற்கொள்ளவேண்டும். அண்மைய போர் நிறுத்த காலப்பகுதியில் விடுதலையான பலஸ்தீன பணயக்கைதிகளின் வீடுகளுக்கு செல்லும் இஸ்ரேலிய படையினர் அந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடக் கூடாதென்றும் அச்சுறுத்துகின்றனர்.
சர்வதேச நியமங்களை மீறி சர்வதேச உடன்படிக்கைகளை மீறி செய்யப்படும் இந்த போர்க் குற்றத்திற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. இது இனப்படுகொலை அல்லது போர்க்குற்றம் இல்லையெனில் வேறெவற்றை நாங்கள் சொல்வது? சர்வதேச சமூகம் இரட்டைவேடத்தை பூணாமல் நடுநிலையாக இந்த விடயத்தை கையாள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.