பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட கால்தடத்தை வைத்து ஆய்வாளர்கள் புதிய டைனோசர் வகையை அடையாளம் கண்டுள்ளனர். 1980களில் சாவ் பாவ்லோ மாநிலத்தின் அராராகுவாரா நகரில் இருந்த பாறைகள் மீது கால்தடத்தின் சுவடு கண்டுபிடிக்கப்பட்டது.
பாலைவனத்தில் இருந்த மணல் மேடு கால ஓட்டத்தில் பாறைகளாக மாறியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பிரேசிலின் புவியியல் அரும்பொருளகத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்தடத்தின் மாதிரி மற்ற டைனோசர் வகைகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாக இருந்தது.
அது Farlowichnus Rapidus எனும் புது வகை டைனோசருக்குச் சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்டது.
90 சென்ட்டிமீற்றர் வரை உயரம் கொண்டிருக்கக்கூடிய அந்த டைனோசர் பாலைவனத்தில் மிகவும் விரைவாகச் செல்லக்கூடியது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
இந்த வகை டைனோசர் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது என நம்பப்படுகிறது.
டைனோசர் கண்டுபிடிப்பு குறித்த தகவல் ஆய்வு சஞ்சிகை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.